இந்தியாவில் ஒரு மனிதனின் பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு நபரின் பிறந்த தேதி, பிறந்த இடம் மற்றும் பெற்றோரின் பெயரை சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான அரசாங்க ஆவணமாகும். ஒரு குழந்தை பிறந்த நாளிலிருந்து 22 நாட்களுக்குள் பிறப்பை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். குழந்தையின் பிறப்பை 22 நாட்களுக்குப் பிறகு பதிவு செய்ய வேண்டுமானால் அபராதம் செலுத்த வேண்டும். பிற்காலத்தில் ஒரு குழந்தையை பள்ளியில் சேர்க்கவும், பான் அட்டை பெறவும், ஓட்டுநர் உரிமம் பெறவும் பிறப்புச் சான்றிதழ் மிகவும் அவசியம் என்பதால், விரைவில் பிறப்புச் சான்றிதழைப் பெறுவது சிறந்தது. இந்த கட்டுரையில், தமிழ்நாட்டில் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு பின்பற்றப்படும் நடைமுறைகள் பற்றி காணலாம்.
பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தல்:
தமிழ்நாட்டில் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க பின்வரும் படிகளை பின்பற்ற வேண்டும். குழந்தையின் பெற்றோர் அல்லது அருகிலுள்ள குடும்ப உறுப்பினர் பிறப்புச் சான்றிதழ்களுக்கு கீழ்கண்ட படிகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.
படி 1: டவுன் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு நேரில் செல்லுதல்.
பிறப்பை பதிவு செய்வதற்கான முதல் படி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு நேரில் செல்வது அல்லது தமிழக அரசாங்கத்தின் ஒரு பொதுவான சேவை மையத்தை பார்வை இடலாம். சென்னையில் பிறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்ய, அந்தந்த மண்டல உதவி சுகாதார அதிகாரி அல்லது பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரை நேரில் சென்று சந்திக்கலாம்.
படி 2: சான்றிதழுக்கு விண்ணப்பித்தல்.
பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் நபர், விண்ணப் படிவத்தை சமர்ப்பிக்கும் நேரத்தில் தேவையான ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். பொதுவாக இதற்கு பெற்றோரின் அடையாளம் மற்றும் முகவரி ஆதாரம் தேவைப்படுகிறது.
படி 3: விவரங்களை பூர்த்தி செய்தல்.
விண்ணப்ப படிவத்தைப் பெற்ற பிறகு, அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
- குழந்தையின் பெயர்.
- பெற்றோரின் பெயர்.
- குழந்தையின் பாலினம்.
- பிறந்த தேதி.
- பிறந்த இடம்.
படி 4: படிவத்தை சமர்ப்பித்தல்:
படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்த பின்னர், விண்ணப்பதாரர் அந்த படிவத்தை நகர பஞ்சாயத்து அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் விண்ணப்பதாரர் கூடுதல் ஆவணங்களை இணைத்து வழங்க வேண்டும்.
முக்கியமாக தேவைப்படும் ஆவணங்கள்:
- மருத்துவமனையில் வழங்கப்பட்ட பிறப்பு கடிதத்தின் சான்று (பிறப்பு நடந்தபோது இது மருத்துவமனையால் வழங்கப்படும்).
- பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்கள்.
- முகவரி சான்று: பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்.
# வாக்காளர் அடையாள அட்டை.
# மின்சாரம் / எரிவாயு / குடிநீர் வரி / தொலைபேசி ரசீது.
# கடவுச்சீட்டு.
# ரேஷன் அட்டை.
# ஆதார் அட்டை.
# உபயோகத்தில் உள்ள வங்கி கணக்கு புத்தகம்.
ஆன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்தல்:
ஆன்லைன் செயல்முறைக்கு, ஒரு குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் வலைத்தளத்தின் மூலம் பிறப்பைப் பற்றிய தகவலை சம்மந்தப்பட்ட அலுவலகத்துக்கு அளிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் நீங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அச்சிட்டு, கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் சம்பந்தப்பட்ட பதிவாளருக்கு நகல் எடுத்த விண்ணப்பத்தை அனுப்பவும். நீங்கள் பயன்படுத்தும் இணையதள பாகத்தில் கீழே மின்னஞ்சல் முகவரி தோன்றும்.
தேவையான பிற ஆவணங்களையும் நகல் எடுத்து இணைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரியில் உங்கள் விண்ணப்பம் சென்றடைந்தன் உறுதிப்படுத்தல் அஞ்சலைப் பெறுவீர்கள்.
சம்பந்தப்பட்ட பதிவாளரால் விண்ணப்பம் கிடைத்த உடனேயே பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தின் நிலை குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.
உங்கள் விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்க்க, இணையதளத்தில் விண்ணப்ப குறிப்பு எண்ணை உள்ளிடவும்.
முழு செயல்முறைக்குப் பிறகு, நீங்கள் வழங்கிய முகவரியில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
பின்னர் அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்தும் நகல் எடுத்துக் கொள்ளலாம்.
பிறப்பு சான்றிதழ் இல்லாத வயது வந்த நபர் பிறப்பு சான்றிதழ் பெரும் வழிமுறை:
நீங்கள் பிறந்த ஊரின் சம்மந்தப்பட்ட நகராட்சி அல்லது பஞ்சாயத்துக்கு அலுவலகத்துக்குச் செல்லுங்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் ஒரு குழந்தை பிறந்த உடன் நகராட்சி அமைப்புக்கு ஒரு பதிவை அனுப்ப கட்டாயப்படுத்தப்படுவதால், உங்கள் பிறப்பு சான்றிதழை குறிப்பிட்ட அதிகாரிகளிடமிருந்து பெயரளவு கட்டணத்தில் எளிதாகப் பெறலாம்.
உங்கள் பிறப்புச் சான்றிதழை வழங்க, பதிவாளருக்கு நீங்கள் பிறந்த இடம், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றைக் கொடுங்கள். அடையாளாச் சான்றுகளுக்கு, உங்கள் ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் மற்றும் எரிவாயு ரசீது அல்லது மின்சார ரசீது போன்ற முகவரி ஆதாரம் போன்ற ஆவணங்களை வழங்க வேண்டும். பின்னர் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட பெயரளவு கட்டணம் செலுத்த வேண்டும். உங்கள் விண்ணப்பத்தின் படி, நீங்கள் கொடுத்த தகவல்கள் மூலம் சரிபார்ப்புக்குப் பிறகு, உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும்.