இந்திய ரயில்வேயில் பொது வகுப்பு ரயில் டிக்கெட்டுகளைத் தவிர மற்ற அனைத்து வகுப்புகளிலும் பயணம் செய்யும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகள் ஒரு ரயிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்பில் உறுதிப்படுத்தப்பட்ட இடத்தை பெற முடிகிறது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. ஒரு பயணி IRCTC போர்ட்டல் மூலம் ஆன்லைனில் முன்கூட்டியே முன்பதிவு செய்யலாம், இது இந்திய இரயில்வேயின் இ-டிக்கெட்டிங் என்றும் அழைக்கப்படுகிறது. அதைத் தவிர, ரயில் நிலையத்திற்கு நேராக சென்று புக்கிங் கவுண்டர் மூலமும் முன்பதிவு செய்யலாம்.
IRCTC இன் இணையதளத்தில் – irctc.co.in படி, ஒரு பயணி தான் பயணம் மேற்கொள்வதற்கு 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்தவுடன், ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் எதிராக ஒரு தனித்துவமான PNR (பயணிகள் பெயர் பதிவு) உருவாக்கப்படும். அந்த எண்ணை வைத்து உங்கள் டிக்கெட்டின் நிலைமையை நீங்கள் ஆன்லைனில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி / IRCTC) பயணிகள் தங்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய சிறந்த வசதியை வழங்கியுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் அமர்ந்த படியே சில நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஐ.ஆர்.சி.டி.சி-யின் இணையதளம் அல்லது மொபைல் அப்ளிகேஷன் மென்பொருளைப் பயன்படுத்தி பயணிகள் தங்கள் மொபைல் போன்கள் மூலம் ரயில்வே டிக்கெட்டுகளை மிக எளிதாக பதிவு செய்யலாம்.
ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்து இருப்பது நேரத்தை வீணாக்கும். இந்த பிரச்சனையை சமாளிக்க ஐ.ஆர்.சி.டி.சி ரயில்வே டிக்கெட் முன்பதிவு முறையை ஆன்லைனில் கொண்டு வந்துள்ளது. மிகவும் எளிதாக இருந்த இடத்தில் இருந்தே நம் மொபைல் போன் மூலம் ரயில் டிக்கெட்டை எப்படி பதிவு செய்யலாம் என்பதை பற்றி இங்கு நாம் காணலாம்.
உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலம் ரயில் டிக்கெட்டை முன் பதிவு செய்வதற்கான எளிய வழிமுறைகள் பற்றி இங்கே படிப்படியாக நாம் காணலாம்:
படி 1 :
முதலில், நீங்கள் www.irctc.co.in என்ற ஐ.ஆர்.சி.டி.சி-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
படி 2:
ஐ.ஆர்.சி.டி.சி இணையதள பக்கத்தின் மேலே, மெனுவின் விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள். ஐ.ஆர்.சி.டி.சி கணக்கில் உள்நுழைய, அதைக் கிளிக் செய்து “உள்நுழைவு” விருப்பத்தை தேர்வு செய்யவும். உங்கள் பயனர்பெயர், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு “உள்நுழை” என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: உங்களிடம் ஏற்கனவே பயனர்பெயர் (login id) இல்லை என்றால், நீங்கள் புது கணக்கை உருவாக்கிக்கொள்ளவும்.
படி 3:
உள்நுழைந்த பிறகு, “எனது பயணத்தைத் திட்டமிடு” என்ற விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள், அதன் கீழே “பிடித்த பயணப் பட்டியலைத் தேர்ந்தெடுக்கவும்”, அதில் நீங்கள் சில விவரங்களை நிரப்ப வேண்டும்.
- நீங்கள் புறப்படும் இடம்.
- சென்றடையும் இடம்.
- பயண தேதி.
- இ-டிக்கெட் பற்றிய விவரம் இங்கே இருக்கும்.
படி 4:
அனைத்து தகவல்களையும் தாக்கல் செய்த பிறகு, “சமர்ப்பி” என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் சமர்ப்பித்தவுடன், அந்த வழியில் செல்லும் அனைத்து ரயில்களின் தகவல்களை கொண்ட பட்டியலை திரையில் பெறுவீர்கள்.
- நீங்கள் எந்த ரயிலில் செல்ல வேண்டும்?
- எந்த பெட்டியில் முன்பதிவு செய்ய விரும்புகிறார்கள்? (ஏசி அல்லது ஸ்லீப்பர்)
- எந்த ஒதுக்கீட்டில் முன்பதிவு செய்ய விரும்புகிறார்கள்? – பொது ஒதுக்கீடு, பெண்கள் ஒதுக்கீடு அல்லது விஐபி ஒதுக்கீடு.
படி 5:
அந்த நாளுக்கான ரயிலை முன்பதிவு செய்ய “இப்போதே புக் செய்யவும்” என்பதைக் கிளிக் செய்யவும். “book now” மீது கிளிக் செய்தவுடன், ஒரு புதிய பக்கம் உங்களுக்கு முன்னால் திறக்கும், இது பயணிகள் விவரம் பக்கம் என்று அழைக்கப்படுகிறது. இதில், பயணிக்கும் நபர்கள் பற்றிய போன்ற சில தகவல்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.
- பயணியின் பெயர்.
- பயணியின் வயது.
- பாலினம் (ஆண் அல்லது பெண்).
- பயணி விரும்பும் படுக்கை (lower /middle /upper)
படி 6:
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது, குழந்தையின் விவரங்களை உள்ளிடவும்.
படி 7 :
இப்போது உங்கள் பயண டிக்கெட் வந்து சேர வேண்டிய மொபைல் போன் எண்ணை உள்ளிட வேண்டும். அனைத்து தகவல்களையும் மொபைல் போன் எண்ணையும் உள்ளிட்ட பிறகு, கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். அதன் பிறகு, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 8:
உங்கள் பயண டிக்கெட்டுக்கு உரிய பணத்தை ஆன்லைனில் செலுத்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு, வாலட் போன்ற பணம் செலுத்தும் முறை பற்றிய அனைத்து தகவல்களையும் நீங்கள் திரையில் பார்ப்பீர்கள், அதன் மூலம் பணம் செலுத்த, உங்கள் வசதிக்கேற்ப தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் ஆன்லைன் மூலம் செலுத்திய பணம் வெற்றிகரமாக சென்றடைந்த உடன், நீங்கள் பதிவு செய்த உங்கள் மொபைல் போன் எண்ணிற்கு உங்கள் பயண டிக்கெட் குறுந்தகவலாக வந்து சேரும்.
பயணிகள் ரயில் பயணத்தின் போது கையில் வைத்திருக்க வேண்டிய அடையாள அட்டைகள்:
பயணிகள் தங்கள் ரயில் பயணத்தின்போது பின்வரும் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக உடன் எடுத்துச் செல்ல வேண்டும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகள் எந்த அடையாள அட்டை விவரங்களையும் உள்ளிட வேண்டியதில்லை. இருப்பினும், பயணிகள் தங்கள் பயணத்தின் போது பின்வரும் அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்திய ரயில்வே துறையால் ஏற்றுக்கொள்ளப்படும் அடையாள அட்டைகள்:
- ஆதார் அட்டை
- வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை
- கடவுச்சீட்டு
- ஓட்டுனர் உரிமம்
- பான் கார்டு
- மத்திய/மாநில அரசால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை.
- புகைப்படத்துடன் கூடிய மாணவர் அடையாள அட்டை
- புகைப்படங்களுடன் கூடிய தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம்
- புகைப்படத்துடன் கூடிய கிரெடிட் அட்டைகள்
- வரிசை எண் கொண்ட புகைப்பட அடையாள அட்டைகள்
மேற்கண்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் அசலை பயணம் மேற்கொள்ளும் போது பயணிகள் தங்கள் கையில் வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். உங்கள் பயணத்தின் போது டிக்கெட்டை பரிசோதிக்க வரும் அதிகாரியிடம் அசல் அடையாள அட்டையை நீங்கள் காட்ட வேண்டும். பரிசோதனையின் போது உங்கள் கையில் அசல் அடையாள அட்டை இல்லை என்றால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
கேள்வி – பதில்கள்:
1. பயணத் தேதி அன்று ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியுமா?
ஆம். ரயிலில் இருக்கைகள்/படுக்கைகள் காலியாக இருந்தால், அட்டவணை தயாராகும் வரை நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
2. IRCTC இணையதளம் மூலம் நான் ரயில் டிக்கெட்டுகளை இருபத்துநான்கு மணி நேரத்திலும் பதிவு செய்யலாமா?
ஒவ்வொரு நாளின் இரவும் IRCTC இணையதளம் மற்றும் ஆப் மூலம் இரவு 11:45 முதல் 12:20 வரை (IST) டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. இந்த நேரம் தவிர்த்த மற்ற நேரத்தில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முன்பதிவு செய்ய முடியும்.
3. ஒரு ரயில் டிக்கெட்டுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை எத்தனை?
பொது ஒதுக்கீட்டு டிக்கெட்டுகளுக்கு அதிகபட்சம் 6 பயணிகளும், தட்கல் கோட்டா டிக்கெட்டுகளில் அதிகபட்சம் 4 பயணிகளும் அனுமதிக்கப்படுகின்றனர்.
4. காத்திருப்போர் பட்டியலுடன் கூடிய டிக்கெட்டுடன் ரயிலில் பயணம் செய்ய முடியுமா?
இல்லை. உங்கள் டிக்கெட்டின் நிலை அட்டவணை தயாரித்த பிறகும் காத்திருக்கும் பட்டியலில் இருந்தால், நீங்கள் ரயிலில் பயணிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
5. ஒரு IRCTC கணக்கு மூலம் முன்பதிவு செய்யக்கூடிய டிக்கெட்டுகளுக்கு ஏதேனும் வரம்பு உள்ளதா?
ஒரு தனிப்பட்ட பயனர் ஒரு கணக்கிற்கு மாதம் 6 டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம். கணக்கை ஆதார் அட்டையுடன் இணைப்பதன் மூலம் இதை மாதத்திற்கு 12 டிக்கெட்டுகளாக நீட்டிக்க முடியும்.