இந்திய சாலைகளில் உங்கள் மோட்டார் வாகனத்தை ஓட்ட விரும்பினால் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது மிகவும் முக்கியம் ஆகும். இன்றைய காலகட்டத்தில், எந்த நேரத்திலும் தேவையான இடங்களுக்கு பயணிக்க உங்களுக்கு உதவுவதால் சொந்தமாக வாகனம் வைத்திருப்பது மிகவும் அவசியமாகிவிட்டது. மேலும், வாகனம் ஓட்டுவது நீங்கள் விரும்பும் இடத்திற்கு செல்ல உங்களுக்கு சுதந்திரத்தை அளிக்கிறது. நீங்கள் சொந்தமாக வாகனம் வைத்திருந்தாலும் சாலைகளில் வாகனத்தை ஓட்ட வாகன உரிமம் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
முதலில் நீங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். இந்திய மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் படி ஒரு வாகன ஓட்டுநர், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். தமிழ்நாட்டில், உங்கள் மோட்டார் வாகனத்தை ஓட்டத் தொடங்க, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முதல் படியாக நீங்கள் முதலில் ஒரு கற்றல் உரிமத்தைப் பெற வேண்டும், அதன் பிறகு தான் நீங்கள் நிரந்தர ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியும். தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான செயல்முறையை நிர்வகிக்கும் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. எனவே தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் பெறுவது குறித்த அனைத்து தகவல்கள் பற்றியும் இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள பல்வேறு வகையான ஓட்டுநர் உரிமங்கள்:
தமிழ்நாட்டில், ஒரு நபர் ஓட்ட விரும்பும் வாகன வகையின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் போக்குவரத்து வாகனம் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து அல்லாத வாகனங்கள்: தனிப்பட்ட வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமத்தைப் பெற விரும்பும் நபர்களுக்கு இந்த வகை உரிமம் வழங்கப்படுகிறது. போக்குவரத்து அல்லாத வாகனத்திற்கு ஓட்டுநர் உரிமம் கோரும் ஒரு நபர் லாரிகள், பேருந்துகள், டிராக்டர்கள் போன்ற போக்குவரத்து வாகனங்களை ஓட்ட முடியாது. போக்குவரத்து அல்லாத வாகனத்தின் கீழ், ஒரு விண்ணப்பதாரர் ஒரு ஓட்டுநர் உரிமம் பெறும் வாகன வகையை குறிப்பிட வேண்டும்.
போக்குவரத்து அல்லாத வாகனங்களின் கீழ் வழங்கப்படும் பல்வேறு வகை உரிமங்கள் பின்வருமாறு:
1. கியர் கொண்ட மோட்டார் சைக்கிள்கள்: கியர் டிரான்ஸ்மிஷன் கொண்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் உள்ளடக்கியது.
2. கியர் இல்லாத மோட்டார் சைக்கிள்கள்: மொபெட்ஸ் மற்றும் ஸ்கூட்டர்கள் போன்ற கியர் இல்லாமல் அனைத்து மோட்டார் வாகனங்களும் அடங்கும்.
3. லைட் மோட்டார் வாகனங்கள்: கார்கள் மற்றும் பைக்குகள் அடங்கும்.
போக்குவரத்து வாகனம்: வணிக வாகனங்களை ஓட்ட விரும்பும் நபர்களுக்கு இந்த வகை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது.
போக்குவரத்து வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு வகை உரிமங்கள் பின்வருமாறு:
1. இலகுரக மோட்டார் வாகனம்: ஆட்டோ ரிக்ஷாக்கள், ஜீப், டாக்சிகள், டெலிவரி வேன்கள் போன்ற வாகனங்கள் அடங்கும்.
2. கனரக மோட்டார் வாகனம்: லாரிகள், பேருந்துகள், டிராக்டர்கள் போன்ற வாகனங்கள் அடங்கும்.
தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தகுதிகள்:
1. என்ஜின் திறன் 50 சி.சிக்கு மிகாமல் கியர் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டும் உரிமத்திற்கு விண்ணப்பிக்க, ஒரு விண்ணப்பதாரர் 16 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
2. கியர், லைட் மோட்டார் கொண்ட மோட்டார் வாகனங்களுக்குரிய ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க, ஒரு விண்ணப்பதாரர் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
3. வணிக வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க, ஒரு விண்ணப்பதாரர் 20 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
4. நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற, ஒரு விண்ணப்பதாரர் முதலில் கற்றல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.
5. ஒரு விண்ணப்பதாரர் கற்றல் உரிமத்தைப் பெற்று 30 நாட்களுக்குப் பிறகு நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் கற்றல் உரிமம் பெறப்பட்ட நாளிலிருந்து 180 நாட்களுக்குள் நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
6. ஒரு விண்ணப்பதாரர் அனைத்து போக்குவரத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் பெற தேவையான ஆவணங்கள்:
ஓட்டுநர் உரிம விண்ணப்பதாரர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெற கீழேயுள்ள ஆவணங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி ஆதாரம்: (விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம்)
1. கடவுச்சீட்டு
2. எல்.ஐ.சி பாலிசி
3. அரசு வழங்கிய பே – ஸ்லிப்
4. வாக்காளர் அடையாள அட்டை
வயது ஆதாரம்: (விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம்)
1. பள்ளி சான்றிதழ்
2. பான் அட்டை
3. ஆதார் அட்டை
4. பிறப்பு சான்றிதழ்
சமர்ப்பிக்க வேண்டிய பிற ஆவணங்கள்:
1. விண்ணப்ப படிவம் – 4
2. அசல் கற்றல் உரிமம்
3. செல்லுபடியாகும் வாகன ஆவணங்கள்
தமிழகத்தில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது ஒரு வசதியான மற்றும் எளிமையான செயல் ஆகும். ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் முதலில் ஒரு கற்றல் உரிமத்தைப் பெற வேண்டும், அதன் பிறகு தான் விண்ணப்பதாரர் ஓட்டுநர் உரிமத்தைப் பெற தகுதியுடையவர் ஆவார்.
ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் எவ்வாறு பெறலாம் என்பது பற்றி இங்கே காணலாம்:
ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் பெற, நீங்கள் பின்வரும் செயல்முறையைப் பின்பற்ற வேண்டும்:
1. விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை தமிழக மாநில அரசு வலைத்தளமான www.tnsta.gov.in டிரான்ஸ்போர்ட் இல் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
2. படிவத்தை அச்சிட்டு, பூர்த்தி செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
3. ஓட்டுநர் சோதனை நடத்த விண்ணப்பதாரர் பொருத்தமான தேதி மற்றும் நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அதிகாரி உங்கள் தகவலை சரிபார்த்த பின்னர், நீங்கள் ஓட்டுநர் சோதனை பயிற்சியை மேற்கொள்ளலாம்.
5. சோதனை தேர்வில் தேர்ச்சி பெற்றால், விண்ணப்பதாரர் ஓட்டுநர் உரிமத்தை வெகு சீக்கிரமே பெற்று விடலாம்.
ஓட்டுநர் உரிமத்தை ஆஃப்லைனில் நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பது பற்றி இங்கே காணலாம்:
1. விண்ணப்ப படிவத்தை தொடர்புடைய ஆவணங்களுடன் இணைத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
2. ஓட்டுநர் சோதனை நடத்த ஒரு குறிப்பிட்ட நேரத்தையும், தேதியையும் நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
3. ஓட்டுநர் சோதனையை மேற்கொள்ள நீங்கள் அருகில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட வேண்டும்.
4. நீங்கள் உங்கள் ஓட்டுநர் சோதனை பயிற்சியில் வெற்றி பெற்றால், உங்களுக்கு ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பது எப்படி?
உங்களுடைய ஓட்டுநர் உரிமம் காலாவதியான தேதிக்குப் பின்னர் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். தமிழ்நாட்டில், ஓட்டுநர் உரிமம் 20 ஆண்டுகளுக்கு அல்லது 50 வயது வரை என இவற்றில் எது முந்தையதோ அதுவரை செல்லுபடியாகும். ஒரு விண்ணப்பதாரர் காலாவதியான தேதியிலிருந்து 5 வருட காலத்திற்குள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கத் தவறினால் மீண்டும் ஓட்டுநர் சோதனை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பதாரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.
தமிழகத்தில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க தேவையான ஆவணங்கள்:
1. ஓட்டுனர் உரிமம்
2. வயது மற்றும் முகவரி ஆதார ஆவணங்கள்
3. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
4. படிவம் 1 அதாவது உடல் தகுதி குறித்த விவரங்கள் அடங்கிய படிவம்
5. படிவம் 1-ஏ, அதாவது மருத்துவ சான்றிதழ், விண்ணப்பதாரர் 50 வயதுக்கு மேல் இருந்தால் இது கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
6. ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் படிவம் அதாவது படிவம் 9. (இந்த படிவத்தை நீங்கள் www.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் )
7. இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 200. தாமதமாக புதுப்பிக்கப்பட்டால், அதாவது காலாவதியான 30 நாட்களுக்குப் பிறகு, புதுப்பிக்க நேர்ந்தால் ஒவ்வொரு நாளைக்கும் ரூ.10 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
8. ஓட்டுநர் உரிமம் வேறு மாநில வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டிருந்தால், உங்கள் ஓட்டுநர் உரிமத்தை உங்களுக்கு வழங்கிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர் மேலே குறிப்பிட்ட படிவங்களையும் ஆவணங்களையும் இணைத்து அருகிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களின் சரிபார்ப்புகளுக்கு பின்னர், விண்ணப்பதாரர் அதே நாளில் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் நகல் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?
ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், ஒரு விண்ணப்பதாரர் பின்வரும் செயல்முறையைப் பின்பற்றி தமிழகத்தில் நகல் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் நகல் ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்துவதற்கு தேவையான ஆவணங்கள்:
1. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
2. எல்.எல்.டி விண்ணப்ப படிவம்.
3. ஓட்டுநர் உரிமத்தின் விவரங்கள், உரிம எண், வைத்திருப்பவரின் பெயர், பிறந்த தேதி போன்றவை.
4. உரிமம் திருடப்பட்டால் காவல் நிலையத்தில் அளிக்கப்பட புகாரின் எஃப்.ஐ.ஆர் நகல்.
நகல் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப நடைமுறை:
1. ஒரு விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை தொடர்புடைய ஆவணங்களுடன் இணைத்து அருகிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
2. விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
3. விண்ணப்பதாரருக்கு தற்காலிக ஓட்டுநர் உரிமமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு ரசீது வழங்கப்படும்.
4. அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர், விண்ணப்பதாரருக்கு நகல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
ஓட்டுநர் உரிமம் தொலைத்துவிட்டால், விண்ணப்பதாரர் விரைவில் நகல் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். ஓட்டுநர் உரிமம் தொலைந்த தேதிக்கும், விண்ணப்பம் செய்யும் தேதிக்கும் இடையே ஆறு மாத இடைவெளி இருந்தால், விண்ணப்பதாரர் ஒப்புதலுக்காக போக்குவரத்துத் துறை தலைமையகத்திற்கு ஒரு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
தமிழ்நாட்டில் சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஒரு வேளை தமிழ்நாட்டில் வசிப்பவர் வெளிநாட்டில் வாகனம் ஓட்ட விரும்பினால், அவர் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தைப் பெற வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மாநிலம் முழுவதும் உள்ள குடிமக்களுக்கு சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை வழங்குவதற்கான பொறுப்பை பெற்றுள்ளனர்.
சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற தேவையான தகுதிகள்:
1. ஒரு விண்ணப்பதாரர் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
2. செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
3. ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தப்பட்டிருந்தால், விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க முடியாது.
4. ஓட்டுநர் உரிமம் பெற்ற நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
5. வேறொரு மாநிலத்திலிருந்து தமிழகத்திற்குச் சென்ற நபர்கள் தங்களின் குடியிருப்பு முகவரியை மாற்றி பின்னர் சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
சர்வதேச ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள்:
1. சர்வதேச ஓட்டுநர் உரிம விண்ணப்ப படிவம் அதாவது படிவம் 4 ஏ
2. செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தின் நகல்
3. விசா மற்றும் பாஸ்போர்ட்டின் நகல்
4. மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
5. மருத்துவ சான்றிதழ்
விண்ணப்பதாரர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் சென்று தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். சர்வதேச ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு, விண்ணப்பதாரர் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர், விண்ணப்பதாரருக்கு சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.